வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநா தபுரம் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து சாதனை படைத்து வருகிறார் விவசாயி ஒருவர்.
ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது எட்டிவயல் கிராமம். கிராமத்தைச் சுற்றி கருவேல மரங்கள் சூழ்ந்திருக்க, அதன் நடுவே 54 ஏக்கர் பரப்பளவில், பசுமைத் தீவுபோல காட்சி தருகிறது தரணி முருகேசனின் இயற்கை விவசாயப் பண்ணை.
இங்கு விவசாயத்துடன் கறவை மாடு, கோழி, மீன், முயல், புறா வளர்ப்பு என உபதொழில்களையும் இணைத்து ஒருங்கிணைந்த பண்ணையம் செய்து முன்மாதிரி விவசாயியாகத் திகழ்கிறார்.
பல பயிர் சாகுபடி குறித்து `இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: விவசாயத்தை இயற்கையோடு ஒன்றிணைந்து செய்தால் எப்பவும் லாபக் கணக்குதான் என்பதை புரிந்து கொண்டு விவசாயம், கால்நடை, மீன் வளர்ப்பு என அனைத்தையும் ஒருங்கிணைந்த பண்ணையமாகச் செய்து வந்ததால் நல்ல வருமானம் கிடைக்கிறது.
எனது விவசாய நிலம் உப்பு நீர் நிலம். அதனால் உப்புத் தண்ணீரில் எந்த வெள்ளாமை நன்றாக வரும் என்பதை தெரிந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பல பயிர் சாகுபடி முறையில் இறங்கினேன்.
பயிர் வகைகளில் பாசிப் பயறு, தட்டைப் பயறு, உளுந்து, கொள்ளு, காய்கறிகளில் கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்தவரை, சிறு தானியங்களில் கேப்பை, கம்பு, சோளம், பழ வகையில் கொய்யா, இது தவிர அகத்தி, ஆமணக்கு, சூபாபுல் ஆகியவற்றை நட்டுள்ளேன். மேட்டுப் பாத்தி அமைத்து 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
சிறு தானியங்கள் மொத்தமாக அறுவடை செய்யப்படும். பயறு வகைகள் மாதத்துக்கு ஒருமுறையும், காய்கறிகள், கீரைகள் அன்றாடமும், வாரத்துக்கு ஒரு முறையும் அறுவடை செய்து வருகிறோம். இதனால் தினம், வாரம், மாதம் என்று ஆண்டு முழுவதும் பலன் கிடைக்கும்.
சுழற்சி முறை சாகுபடி செய்வதால் ஒரு பயிரோட விலை வீழ்ச்சி அடைந்தாலும், மற்றொன்று காப்பாற்றிவிடும். இதனால் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒரே பயிரை நிலம் முழுவதும் பயிரிட்டு, அதை மட்டுமே நம்பியிருக்காமல், நிலத்தைப் பல பிரிவாகப் பிரித்து, பல பயிர் சாகுபடி செய்ததால், எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைத்தது. இதன் மூலம் வீட்டுத் தேவையையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றார்.